முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மயிலம் பொம்மபுர ஆதீனம்



*🌸மயிலம் பொம்மபுர ஆதீனம்🌸*


மயிலம் பொம்மபுர ஆதீனம் வீரசைவ மரபைச் சேர்ந்த ஆதீனமாகும். கர்னாடகத்தில் வீரசைவர்கள் வணங்கும் மகான் பசவேசர் மயிலம் ஆதீனத்தில் தீட்ஷை பெற்றவரே ஆவார். இது புதுவையை ஒட்டிய தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்ட கடலோர எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. ஆதீனங்கள், பக்தி நெறி தழைக்கவும், தமிழ் மொழியை வளர்க்கவும் தோன்றின. மனித நிலையிலிருந்து இறைநிலையை அடைய உதவும் வாழ்வியல் ஒழுகலாறுகளைப் போதிப்பவை ஆதீனங்களாகும்.

*🌸ஆதீனத் தோற்றம்:*

மயிலம் பொம்மபுர ஆதீனம் திருக்கயிலாய ஞானபரம்பரையின் வழிவந்தது ஆகும். திருக்கயிலையில் சிவபெருமானுக்கு மேற்குத் திசைக் காவலராக விளங்கிய பூதகணங்களுள் ஒருவர் சங்குகன்னர் ஆவார். இவரைச் சிவபெருமான் அழைத்து, ‘தென்னாட்டில் வீரசைவநெறி தழைத்தோங்கவும் சித்தர் கொள்கைகள் வலுப்பெறவும் செய்க!’ என்று அருளாணை இட்டார்.

*🌸ஆதீனகர்த்தர் சங்குகன்னர்:*

அதற்குச் சங்குகன்னர் கயிலையில், ‘தான் இருப்பது போன்றே மண்ணுலகிலும் இறைவனுக்கு அருகில் இருக்கும் நிலையை அடைந்திருக்க வேண்டும்’ என்று சிவபெருமானிடம் வேண்டினார். அவ்வேண்டுதலை சிவபெருமான் ஏற்று, ‘முருகப் பெருமானின் அருளோடு அவருக்கருகில் சிவயோக சமாதியுற்று சிவலிங்க வடிவமெய்தி அடியார்களால் வணங்கப்பெறும் நிலை பெறுக!’ என்று வாழ்த்தியருளினார்.

*🌸சங்குகன்னர் அவதாரம்:*

அவ்வழியே சங்குகன்னர் உலகில் கருவழித் தோன்றாமல் திருநீறு, உருத்திராக்கம், கல்லாடை, இட்டலிங்கம் அணிந்த மார்பு, செஞ்சடை, குண்டலமணிந்த திருச்செவிகள், சின்முத்திரையுடன் கூடிய வலக்கை, திருநீற்றுப்பை, மாத்திரக்கோல் இடக்கை, வீரசைவ ஆகமங்கூறும் திருவாய், ஐந்தெழுத்தை ஒலிக்கும் திருநாக்கு ஆகியவற்றுடன் கூடிய திருக்கோலத்துடன் பத்து வயது நிறைந்த பாலகனாகத் தோன்றினார்.

*🌸ஆதீனத் தோற்றம்:*

இதனை அடுத்துள்ள, பெருமுக்கல் முதலிய மலைகளுக்கும் வனங்களுக்கும், தம் யோக வல்லமையால் உலாவிச் சென்று ஆங்காங்குள்ள சித்தர்களுக்கும், அடியார்களுக்கும் வீரசைவ ஆகம நெறிகளை உணர்த்தினார். சித்துக்களையும் செய்தருளினார். பாலவயதினராய்ச் சித்துக்கள் பல செய்தமையால் பாலசித்தர் எனப்பெயர் கொண்டார். பிரம்மநிலையை உணர்ந்து தங்கியிருந்தமையால் இவ்வூர் பிரமபுரம் என வழங்கலாயிற்று. பாலசித்தரின் தவஆற்றல் உலகில் பரவியதால் சீடர்கள் பலர் உருவாயினர். அச்சீடர்களின் பக்குவநிலையறிந்து ஞானஉபதேசம் செய்தருளித் தாம் தங்கிச் சிவயோகம் புரிவதற்கு அமைத்துக் கொண்ட திருமடம் பொம்மயபாளையத் திருமடம் என்ற பெயரில் அழைக்கப் பெறலாயிற்று.

*🌸மயிலை வரலாறு:*

இங்ஙனம் பாலசித்தர் திருமடத்தில் வீற்றிருக்கும் நாளில், சிவபெருமானது ஆணையின்வண்ணம் நாரதர், பாலசித்தர் முன் தோன்றி, ‘பொம்மபுரத்திற்கு மேற்கே மயூராசலம் (மயிலம்) என்ற ஓர் ஊர் உள்ளது. ஆங்கே முன்னாளில் சூரபதுமன் மயில் வடிவ மலையாக இருந்து முருகனை நோக்கி, கடுந்தவம் புரிந்தனன். அதற்கு முருகப் பெருமான் சூரபதுமன் விருப்பப்படியே அவனை மயில்வாகனமாக ஏற்றருளினார். அவனும் “ஐயனே, மலைவடிவாக இருந்து யான் தவம் செய்தமையால் இம்மலை மயிலமலை என்ற பெயரால் வழங்க வேண்டும்” என்றும் “தேவரீர் எந்நாளும் இங்கிருந்து அன்பர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும்” என்றும் வேண்டிக் கொண்டான். அவ்வாறே முருகனும் “சிலகாலத்திற்குப் பின்னர் இம்மலையில் பாலசித்தர் என்பால் எம்மை நோக்கி வந்து தவம் புரிந்து எம்முடன் போரிட்டு எம்மால் ஆட்கொள்ளப் பெறும் காலத்து எம்தேவியருடன் எழுந்தருளி நின் விருப்பத்தை நிறைவேற்றுவோம்” என்றுரைத்து மறைந்தருளினார். எனவே, தாங்களும் மயிலமலையை அடைந்து தவம் செய்தால் எண்ணிய யாவும் கைகூடும்’ என்று நாரதர் பாலசித்தருக்கு உணர்த்தி விடைபெற்றார்.

*🌸மயிலைத் தவம்:*

இந்நிலையில், பாலசித்தர் மயிலம் அடைந்து அங்குள்ள சுனைகளில் நீராடி முருகனை வழிபட்டார். மேலும் முருகனை நோக்கி, பதுமாசனமாக முப்பத்தைந்து ஆண்டு காலம் தவநிலையில் இருந்தார். முருகன் அருள்புரியாததால் பஞ்சாக்கினி நடுவிலிருந்து கடுந்தவமும் புரியலானார். இந்நிலையிலும் முருகப்பெருமான் அருளாததால் அவர்தம் தேவியராகிய வள்ளி தெய்வயானையரை நோக்கி, பலநாள் தவம் செய்தார் பாலசித்தர். தேவியர் இருவரும் சித்தரின் தவத்திற்கு இரங்கி, அவருக்கு அருள்புரியுமாறு முருகப் பெருமானிடம் வேண்டினர். முருகனும் “அருள்புரியும் காலம் வருந்துணையும் யாம் அமைதியாக இருப்பதனை அறியாமல் அவருக்கு அருள்புரிய வேண்டுமென்று வற்புறுத்தும் நீவிர் இருவரும் எம்மை விட்டு அகல்வீராக” என ஆணையிட்டார்.

*🌸அன்னையர் அருள்:*

உடனே, பாலசித்தருக்கு அருள்புரியாத முருகன்பால் ஊடல் கொண்ட தேவியர் இருவரும் சித்தக் கன்னியர்களாக வடிவம் கொண்டு சித்தருக்கு முன் தோன்றி நின்றனர். அதனைக் கண்ட சித்தர் முருகப் பெருமானுடைய தேவியர்களே தம்மை ஆட்கொள்ள இவ்வுருக் கொண்டு எழுந்தருளினர் என யோக ஞான வல்லமையால் உணர்ந்து, அவர்களை உபசரித்து, “நீங்கள் யார்? வந்த காரணம் யாது?” என வினவினார். அவர்களும் “இவ்விடத்தில் சித்தர் இருப்பதை அறிந்து இங்கு உறைய விரும்பி வந்தோம். நீங்கள் உங்கள் புதல்வியர்களாக எங்களைப் போற்றிக் காத்தல் வேண்டும்” என வேண்டினர். அதற்குச் சித்தரும் உடன்பட்டுத் தேவியரை, தேவதச்சனைக் கொண்டு ஒரு மாளிகை உருவாக்கச் செய்து அதில் வீற்றிருக்கச் செய்தார்.

*🌸முருகனொடு பொருதுதல்:*

முருகப்பெருமான் பாலசித்தருக்கு அருள்புரியும் காலம் கனிந்தமையால் பிரிந்த தேவியரைத் தேடிவருவார்போல, மயில மலையை அடைந்து தேவியர் இருக்கும் இடம் இதுவெனத் துணிந்து போர்க்கோலம் கொண்ட அரசர் வடிவத்தில் அம்மாளிகையில் நுழையச் சென்றார். அங்கிருந்த பாலசித்தர், “கன்னியர் இருக்குமிடத்து ஆடவர் புகுதல் தகாது” எனத் தடுத்தும் முருகன் நுழைய முற்பட்டபோது இருவருக்கும் போர் ஏற்பட்டது. பாலசித்தர் முருகன் எய்திய படைகள் அனைத்தையும் தடுத்ததோடு, இறுதியாக முருகன் ஏவிய வேலினையும் கன்னியர் அருளால் தம்வசப்படுத்திக் கொண்டார். முடிவில், முருகப்பெருமான் படைக்கருவிகள் அற்றநிலையில் சித்தருடன் நேருக்கு நேராக மற்போர் புரியத் தொடங்கினார். பாலசித்தரது மார்பில் அறைந்து அவரைக் கீழே தள்ளியும் ஒருவரோடு ஒருவர் கட்டிப் புரண்டும் காலால் உதைத்தும் போர் புரிந்து அருளினார்.

*🌸மணக்கோலம்:*

தம்மோடு போர்புரிந்தவர் முருகனே என உணர்ந்த பாலசித்தர் போர் செய்த குற்றத்தைப் பொறுத்தருளுமாறு திருவடி பணிந்து வேண்டி நின்றார்.
முருகனும் அவ்வாறே பாலசித்தருக்கு ஞான உபதேசம் வழங்கி மாளிகையினுள் இருந்த அரியணையில் அமர்ந்தார். அந்நிலையில் சித்தரும், தேவியர் இருவரையும் அழைத்து வந்து, அவர்களோடு முருகப் பெருமானை வணங்கி நின்று, “அடியேன் என் புதல்வியர்களாகப் பாவித்த இக்கன்னியர்களை தேவரீர் மணமுடித்து மணக்கோலத்துடன் இத்தலத்தில் எந்நாளும் எழுந்தருள வேண்டும்” என வேண்டினார்.
அவ்வாறே, முருகனும் உமாதேவியாரோடு சிவபெருமான் தேவகணங்கள் சூழ எழுந்தருளும்படி தியானித்தார். அக்கணத்தே, தேவகணங்கள் சூழ இறைவனும் இறைவியும் எழுந்தருளி மயன் வகுத்த மணிமண்டபத்தில் வீற்றிருந்தனர். சிவனது அருளாணையின் வண்ணம் நான்முகன் திருமணச் சடங்கு நிகழ்த்த, பாலசித்தர் தத்தநீர் வார்க்கவும், முருகன் கன்னியர் இருவரையும் மணந்தருளினார்.

*🌸அருள் கனிந்தது:*

அவ்வமயத்தில், சிவன் பாலசித்தரை நோக்கி, “இத்திருத்தலத்தில் நம் குமரனாகிய முருகன் என்றென்றும் திருவருளையும் குருவருளையும் வழங்கிக் கொண்டிருக்க இன்னும் ஐந்நூறு ஆண்டு காலம் அனைவருக்குக்கும் புலப்படுமாறு வெளிப்பட இருந்து வீரசைவ நெறியை ஓங்கச் செய்து, பின் முருகனின் வலப்பாகத்தில் ஜீவசமாதி நிலையடைந்து பின் அருளுருப் பெற்று அனைவருக்கும் அருள் வழங்குக!” என அருள்புரிந்தார்.

*🌸சீடர் பரம்பரை:*

இவ்வாறு அருள்பெற்ற பாலசித்தர், பொம்மபுரத்தை அடுத்த பெருமுக்கல் மலையில் தங்கியிருந்து வீரசைவ நெறிபரப்பிவந்த காலத்தில், சிதம்பரம் பச்சைக்கந்த மரபைச் சார்ந்த அம்மவை என்பார் மகப்பேறு இன்றி வருந்தினார். இனிச் சிவத்தொண்டே மேற்கொள்வது என்னும் திண்ணிய எண்ணத்தோடு பாலசித்தரை அணுகி, அவருக்குத் தம் கணவரும் தாமும் தொண்டு புரியலாயினர். அம்மவை அம்மையார் சித்தருக்குத் தாமே சதுரக்கள்ளிப் பாலைக் கறந்து வந்து கொடுக்கும் திருத்தொண்டினைச் செய்து வந்தார். அங்ஙனம் கள்ளிப்பாலைத் தந்த அளவில் சித்தர் உண்டு எஞ்சிய கள்ளிப்பால் பிரசாத சேடத்தை அம்மவை அம்மையார் அருந்தியதால் குருவருள் வழி ஓர் அழகிய ஆண்மகவை ஈன்றெடுத்தார். பாலசித்தருடைய அறிவுரைப்படி அவருடைய திருவருட் பார்வையால் அக்குழந்தை வளர்ந்து, அவருக்குத் தொண்டு செய்து வந்தது. அக்குழந்தையின் பக்குவநிலையுணர்ந்து சீடராக அமைத்துக் கொண்டார் பாலசித்தர்.

*🌸சிவஞானபாலய சுவாமிகள்:*

முருகன் அருள்பெற்ற பாலசித்தர் பொம்மபுர மடத்தில் அச்சீடருக்குச் சந்நியாசாசிரமம் தந்து, ஞானஉபதேசம் புரிந்து, பின்னர் ஆசாரிய அபிடேகமும் செய்து, தமது அமிசத்திலே ஓர் அமிசம் அவரிடத்தில் பதியும்படி திருவருள் புரிந்து, அவர்தம்மை நோக்கி “நீ பாலை உணவாகக் கொண்டு, சீடபரம்பரையோடு சிவஞானபாலய தேசிகன் என வாழ்வாயாக!” என்று அருள்புரிந்தார். மேலும், “இத்திருமடம் பாலயசுவாமிகள் திருமடம் என்றும் வழங்குவதாகுக!” என அருள்புரிந்த நிலையில் பாலசித்தரின் சீடர் பரம்பரை மயிலம் திருமடத்தில் வீரசைவ நெறிபோற்றிச் சிவத்தொண்டை வாழையடி வாழையாக வளர்த்து வருகிறது.

தற்போது 20ம் பட்டம் சுவாமிகள் சிவதொண்டாற்றி வருகிறார்.

ஆண்டுதோரும் காணும் பொங்களன்று இத்திரு மடத்தில் சுவாமிகளை கண்டு வழிபட்டு ஆசிகள் பெறலாம்.

வருகின்ற 17.01.2018 வியாழக்கிழமை காணும் பொங்கல் தினமாகும். திருவருளோடு குருவருள்கிட்டிட குடும்பத்தோடு சென்று வணங்கி அருளாசி பெறுவோம்.

🙏🙏🙏🌸🔥🌸🙏🙏🙏

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வீரசைவ பண்டாரம் தோற்றம்

பண்டாரம் அல்லது பண்டாரத்தார் என அழைக்கப் பெறுவோர் வீரசைவ குலத்தைச் சார்ந்தவர்களாவர்,,. ஆண்டிப் பண்டாரம், பண்டராம், ஜங்கம், யோகிஸ்வரர், லிங்காயத், வைராவிகள், புலவர், கன்னடியர், ஜங்கமர் போன்ற 19 உட்பிரிவைச் சார்ந்தவர்கள். பண்டாரம் சாதியினர் பெரும்பாலும் கோவில்களில் காவடி கட்டுதல், பூக்கட்டுதல் போன்றவற்றை செய்து வருகின்றனர். தற்பொழுது அனைத்து விதமான தொழில்களும் செய்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படாத கோயில்களில் பணிபுரிபவர்கள் தான் ஆண்டிப்பண்டாரங்கள். தோற்றம் வீரசைவ சமயத்தைக் கன்னடத்தில் 1125-1165 ஆண்டுகளில் வாழ்ந்த பசவண்ணர் தோற்றுவித்தார். இவர் கன்னட பிராமணர் குலத்தில் தோன்றியவர். 14 ஆம் நூற்றாண்டில் இது தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியது. 15 ஆம் நூற்றாண்டில் நவலிங்க லீலை முதலான சில நூல்கள் தமிழில் தோன்றின. பிற்காலத்தில் துறைமங்கலம் சிவப்பிரகாசர் இதனை வலுவாக்கினார்.
சைவக் கடவுள்களான சிவன், முருகன் மற்றும் சக்தி ஆகியவற்றை முதன்மை கடவுள்களாக கொண்டு வாழும் திராவிட இனத்தின் மூத்தகுடிகள் ஆவர். சங்ககாலந்தொட்டே சைவத்தையைம் தமிழையும் வளர்ப்பதில் அரும்பாடுபட்டவர்கள். இவர்களில் சில பிரிவினர் சமண மதத்தையும் கடைபிடித்தவர்களாக சொல்லப்படுகிறது. மிகப்பெரிய எண்ணிக்கையுடைய பல பிரிவுகளை கொண்ட அமைப்பாக இருந்தது. இவர்கள் வேளாளர் பிரிவின் வகையை சார்ந்தவர்களும் ஆவர். தற்போது பல பிரிவினர் தங்களை பண்டாரங்களாகவும், சோழிய வேளார்களாகவும், சைவ வேளாளர்களாகவும் தங்களை இணைத்துக்கொண்டனர். மன்னராட்சி காலங்களில் பண்டாரம் என்பது பல பிரிவினர்க்கு மிக உயந்த பட்டமாகவும் கொடுக்கப்பட்டது. இவை காலபோக்கில் பல ஆட்சி மாற்றங்களினாலும், சமுதாய மாற்றங்களினாலும் பல வீழ்ச்சிகளை சந்தித்து, தற்போது 18 பிரிவினர்களாக அருகிவிட்டது. தமிழக வீரசைவம் குல பிரிவுகள். 1.ஆண்டிபண்டாரம் 2.அய்யர் 3.ஐயா 4.தேசிகர் 5.குருக்கள் 6.ஜங்கம் 7.ஜோஹி 8.கன்னடியர் 9. லிங்காயத் 10.மூர்த்தி 11.ஓதுவர் 12.பண்டாரம் 13.பூசாரி 14.புலவர் 15.சிவாச்சார்யா 16.தம்பிரார் 17.வீரசைவர் 18.யோகீஸ்வரர் மேலும் பிற மாநிலங்களில் வாழ்ந்த சில தமிழ...

வீரசைவம் வரலாறு

வீரசைவம் என்றால் என்ன ?  வீரசைவர்கள் யார் ?  வீரசைவதீன் சிறப்பு தன்மைகள் என்ன ?   சைவம் என்றால் ஒளி,  சைவம் என்றால் சிவம்,  சைவம் என்றால் சாந்தி  வீரசைவம் என்ற வார்த்தையை பயன்படுத்திய உடனேயே இது எதாவது மற்ற மதங்களை தாக்குவதற்காக உருவாக்கப்பட்ட மதபிரிவோ என்று யாரும் எண்ண வேண்டாம்.    பொதுவாக சிவனை தவிர வேறு வேறு எவரையும் வீரசைவர்கள் வணங்க மாட்டார்கள்.  சிவாகமங்கள் தவிர வேறு எதையும் படிக்க மாட்டார்கள்.   சிவனடியாரை தவிர வேறு எவரையும் அடியார் என ஏற்று கொள்ள மாட்டார்கள்.  இதில் உறுதியாக இருப்பதினால் அந்த உறுதி நமது இதயத்தை வீரம் பொருந்தியதாக மாற்றி விட்டதினால் தான் நமது பண்டாரசமயத்திற்கு வீரசைவம் என்ற பெயர் வந்ததக பொதுவாக சொல்லப்படுகிறது. பல மொழியியல் வல்லுநர்கள் வீ என்ற முதல் எழுத்து சிவனை குறிப்பதாகவும் ர என்ற இரண்டாம் எழுத்த ஜீவனை குறிப்பதாகவும் விளக்கம் தருகிறார்கள்.  இதற்கு தத்துவார்த்த ரீதியில் வேறொரு பொருளும் சுட்டி காட்டப்படுகிறது. ஐந்து புலன்களை வெல்வதே நிஜமான வீரம் அப்படி புலன்களை வெல்லும் மார்கத்தை இந்த சை...