வீரசைவம் என்றால் என்ன ?
வீரசைவர்கள் யார் ?
வீரசைவதீன் சிறப்பு தன்மைகள் என்ன ?
சைவம் என்றால் ஒளி,
சைவம் என்றால் சிவம்,
சைவம் என்றால் சாந்தி
வீரசைவம் என்ற வார்த்தையை பயன்படுத்திய உடனேயே இது எதாவது மற்ற மதங்களை தாக்குவதற்காக உருவாக்கப்பட்ட மதபிரிவோ என்று யாரும் எண்ண வேண்டாம்.
பொதுவாக சிவனை தவிர வேறு வேறு எவரையும் வீரசைவர்கள் வணங்க மாட்டார்கள்.
சிவாகமங்கள் தவிர வேறு எதையும் படிக்க மாட்டார்கள்.
சிவனடியாரை தவிர வேறு எவரையும் அடியார் என ஏற்று கொள்ள மாட்டார்கள். இதில் உறுதியாக இருப்பதினால் அந்த உறுதி நமது இதயத்தை வீரம் பொருந்தியதாக மாற்றி விட்டதினால் தான் நமது பண்டாரசமயத்திற்கு வீரசைவம் என்ற பெயர் வந்ததக பொதுவாக சொல்லப்படுகிறது.
பல மொழியியல் வல்லுநர்கள் வீ என்ற முதல் எழுத்து சிவனை குறிப்பதாகவும் ர என்ற இரண்டாம் எழுத்த ஜீவனை குறிப்பதாகவும் விளக்கம் தருகிறார்கள்.
இதற்கு தத்துவார்த்த ரீதியில் வேறொரு பொருளும் சுட்டி காட்டப்படுகிறது. ஐந்து புலன்களை வெல்வதே நிஜமான வீரம் அப்படி புலன்களை வெல்லும் மார்கத்தை இந்த சைவமார்க்கம் எளிமையாக எடுத்து சொல்வதினால் வீர சைவம் என்ற பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.
சிவ வழிபாடு என்பது அனாதிகாலம் தொட்டு நடைமுறையில் இருந்தாலும் சைவசமய தத்துவங்கள் பிற்காலத்திலேயே முழுவடிவம் பெற்றது.
அதன் அடிப்படையில் வீர சைவ நெறியும் உருவானது என்றாலும் அது எப்போது முதல் மக்களின் நடைமுறை வாழ்க்கைக்கு வந்தது என்பதை சொல்ல சரியான காலகெடு இது வரை யாருக்கும் தெரியாது.
அதே போலவே இந்த நெறியை இன்னாத்தான் உருவாக்கினார் என்று திட்டவட்டமாக கூற இயலாது
யோகி ராமையா ஜைன மத துறவிகளோடு வாதப்போர் செய்து தோற்று போனதாகவும் அதனால் தன் தலையை தானே துண்டித்து கொண்டதாகவும் ஆனால் சிவபெருமான் அவருக்கு மீண்டும்
உயிர் தந்ததாகவும்
இதனை அறிந்த பிஜ்ஜலன் என்ற அரசன் பாராட்டி விருந்தளித்து பல கிராமங்களை தானமாக அளித்தாகவும் எழுதப்பட்டு இருக்கிறது.
பசவபுராணம் என்ற நூல் சிவபெருமானின் அகோரம், தத்புருஷம், சத்யோஜாதம், வாமதேவம் , ஈசானம் ஆகிய ஐந்து முகங்களில் இருந்து...................
ஏகோராமர் பண்டித ராத்லாரர், இரேவனர், முரலர், விஸ்வராத்யாயர் ஆகிய ஐந்து ஞானிகள் .................
மகான் பசவண்ணருக்கு முற்பட்ட காலம் தோன்றி வீர சைவ நெறி இருந்து வருகிறது என்பதை வரலாற்று நோக்கிலும் புராண அடிப்படையிலும் நிலை நிறுத்தப்படுகிறது.
ஆனாலும் கூட பசவண்ணரே வீர சைவ நெறிக்கு முழுவடிவம் கொடுத்தவர் என்பதை மறுப்பதற்கு இல்லை,
அடிபடையுள் பசவண்ணர் பிராமணராக தான் பிறந்தாலும் கூட
அவர் பிராமணர்களுக்கான வைதீக நெறிமுறைகள் எவற்றையும் ஏற்று கொண்டு செயல்படுத்த வில்லை என்பதே மறுக்கமுடியா உண்மை.
மாறாக முழுக்க முழுக்க சிவ நெறிக்கு உட்பட்ட வீரசைவபண்டார நெறியையே தனது வாழ்நாள் முழுவதும் பின்பற்றி வாழ்ந்து வந்தார் என்பதை அறிய முடிகிறது.
வீர சைவ நெறியை பின்பற்றுபவர்களை லிங்காயதர் என்று அழைக்கிறார்கள் அதாவது இதற்கு லிங்க உடம்பினர் என்று பொருள் சொல்லலாம்
தனது உடலின் ஒரு பகுதியாக சிவலிங்கத்தை / ருத்ராட்சதை இவர்கள் எப்போதும் அணிந்திருப்பதால்
அதாவது இவர்களின் மேனி சிவத்திரு மேனியை எப்போதும் தாங்குவதினால் லிங்காயதர் என பெயர் பெற்றனர் எனலாம்
வீர சைவர்களுக்கு
1) லிங்காசாரம் என்ற லிங்க ஒழுக்கம்,
2) சாதசாரம் என்ற தன்னிலை ஒழுக்கம்,
3) சிவாசாரம் என்ற சிவ ஒழுக்கம்,
4) விருத்யா சாரம் என்ற பணி ஒழுக்கம்,
5) கானாசாரம் என்ற சமுக ஒழுக்கம்
ஆகிய ஐந்துவகை ஒழுக்கங்கள் வலியுறுத்தப்படுகிறது.
1) லிங்க ஒழுக்கம் என்னவென்றால் வீரசைவன் பிறந்து சில மணி நேரங்களிலேயே அவன் கழுத்தில் சிவலிங்கம் / ருத்ராட்சதை அணிவிக்கப்படுகிறது.
அது அவன் சாவு வரையிலும் கூடவே வரும்.
சிவலிங்கத்தை சுமந்து செல்லும் அவன் ஜாதிவேறுபாடு ஏற்றதாழ்வு காணுதல், தீண்டாமை, தேவையற்ற சடங்குகள் போன்றவற்றை எப்போதுமே சிந்திக்க கூடாது.
காரணம் சகல உயிர்களும் சிவனின் அம்சம் இருப்பதினால் அதை பேதப்படுத்தி காணுவது மகாபாவமாகும். எல்லா உயிரையும் ஒன்று என கருதி சிவனோடு ஐக்கியமாவதற்கு மனிதனை உந்தி தள்ளுவதே லிங்க ஒழுக்கமாகும்.
2) சாதசாரம் என்ற தன்னிலை ஒழுக்கம்
வீர சைவன் பிறர் உழைப்பில் எப்போதுமே வாழ கூடாது. இது உயர்ந்த தொழில் அது தாழ்ந்த தொழில் என வேலையில் பாகுபாடு காணகூடாது. தன் உழைப்பில் கிடைக்கும் வருவாயில் தானும் வாழ்ந்து, சமுதாயத்திற்கும் கொடுக்க வேண்டும். என்னிடம் தான் ஏராளமான சொத்து சுகம் இருக்கிறதே செல்வம் கொட்டி கிடக்கிறதே நான் எதற்கு உழைக்க வேண்டும் என்று உட்கார்ந்து சாப்பிடுபவன் உணவை அல்ல பாவத்தையே சாப்பிடுகிறான். இல்லற வாழ்கை வேண்டாம் என்று துறவறத்தை மேற்கொண்டவனும் கூட உழைக்காமல் உண்ணகூடாது.
3) முன்றாவதாக உள்ள சிவ ஒழுக்கம் சிவநெறி ஒன்று மட்டும் தான் உயிர்களுக்கு வரும் துன்பத்தை துடைக்க வல்லது. சிவநெறியில் நிற்பவன் தான் நாடும் ஊரும் நலம் பெற தனது இன்னுயிரை தியாகம் செய்ய துணிவான்.
பிற உயிர்களை துன்பம் தொடராமல் பாதுகாப்பதே இறைவனுக்கு செய்யும் தொண்டாகும். சின்னசிறிய புழுதானே அது அதை நசுக்கினால் அப்படியென்ன பாவம் வந்துவிடப் போகிறது என நசுக்க துணிந்தால் நீ நசுக்குவது புழுவை அல்ல சிவனை என்பதை உணர்ந்து கொள்.
இவ்வொழுக்கம் எல்லா மனிதருக்கும் கட்டாயம் தேவையென வீரசைவம் வலியுறுத்துகிறது அந்த சமயத்தில் ஆழமாக புதைந்து கிடக்கும் சமுதாய நோக்கை நமக்கு படம் பிடித்து காட்டுகிறது.
4) நான்காவது ஒழுக்கமான பணி ஒழுக்கம் என்பது ஒரு மனிதனின் ஆணவத்தை ஒழித்து கட்டுவதை பற்றி பேசுகிறது. நான் உயர்ந்தவன் என்று ஒருவன் நினைத்து கொண்டால் அது தவறல்ல நான் மட்டுமே உயர்ந்தவன் என்று நினைப்பது தவறு மட்டுமல்ல பாவமும் ஆகும்.
அதே போல என் அண்டைய வீட்டுகாரன் தீயவனாக இருந்தால் எனக்கென்ன என்று போவதும் ஒரு வித ஆணவமாகும்
அவன் அடித்தாலும், அவமானபடுத்தினாலும் அவனிடம் உள்ள தீமையை அகற்ற பாடுபடுவது எனது கடமையாகும் என்று செயல்படுவது நமது ஆணவத்தை அறுக்கும் வழியாகும்.
மற்ற ஜீவன்களுக்கு பணியாற்றுவதற்காகவே நான் பிறந்து இருக்கிறேன் என நம்பி செயல்படுவதே வீர சைவனின் லட்சணம்
5) ஐந்தாவது ஒழுக்கமான கணாசாரம் என்ற சமூக ஒழுக்கம் சமூகத்தின் கூட்டுதன்மையை பரஸ்பரம் விட்டு கொடுத்தலை, பொதுநோக்கை வலியுறுத்துகிறது.
நல்லோரை பாதுகாப்பதும், தீயோரை அறவழியில் திருப்புவதும் மிக முக்கியமான காரியமாகும்
இந்த காரியம் கை கூடி வர தனி மனித எத்தனிப்பு கூடவே சமூக எத்தனிப்பும் இருந்தால் மிக விரைவில் ஒட்டுமொத்த உலகத்தில் சிவநெறி மட்டுமே தழைத்து ஓங்கி நிற்கும்
இதற்காக ஒவ்வொரு வீர சைவனும் உழைத்து கொண்டு இருக்க வேண்டுமென இந்து ஐந்தாவது ஒழுக்கம் வலியுறுத்துகிறது.
எட்டுவகையான காப்பு முறைகள் :
இது தவிர குரு, லிங்கம், சங்கமம் , திருவடி துலக்கல், திருவமுது, திருநீறு, ருத்ராட்சம் , மந்திரம் என எட்டுவகையான காப்பு முறைகளும் வீர சைவத்தின் சொல்லப்படுகிறது.
வீர சைவத்தில் ஐந்துவித ஒழுக்கம் , எட்டுவித பாதுகாப்பு இருப்பது போல ஆறுவகைபயிற்சி இருக்கிறது.
இந்த ஆறுவகை பயிற்சிகளை சடுதளம் என்ற பரிபாஷையில் வீரசைவ ஞானிகள் அழைக்கிறார்கள்
பொதுவாக இவர்கள் சிவலிங்கத்தை கழுத்தில் அணிந்து இருந்தாலும் அதற்கென்று உரிய தனிப்பெட்டியில் வைத்திருந்தாலும் தினசரி வழிபாடு செய்ய வேண்டும்.
இவர்கள் வைத்திருக்கு சிவலிங்கத்திற்கு இஷ்டலிங்கம் என்று பெயர்.
இந்த லிங்கத்தை அணிந்தவர் சிறந்த ஒழுக்கசீலராக இருக்க வேண்டும். ஒழுக்கம் என்பது திடிரென ஒரு மனிதரிடம் உருவாவதில்லை.
தொடர்ச்சியான பயிற்சியே ஒருவனை ஒழுக்கமுடையவனாக மாற்றும். அப்படி மாற்றத்திற்கு அழைத்து செல்வது தான் சடுதளம் என்ற பயிற்சிகளாகும்
தினசரி லிங்க பூஜை செய்வதினால் அன்றாட வாழ்க்கை தூய்மையாகிறது. நான் அப்பழக்கற்ற வாழ்கை வாழ்பவன் என்ற எண்ணமே ஒருவனுக்கு கம்பீரத்தை கொடுக்கும். அந்த கம்பீரம் பக்தி என்ற உயிர்உணர்வை பெருக்கும்.
கரடு முரடான பாறை மீது பலகாலம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினால் முரட்டு தன்மை மாறி மென்மையாகி விடுவது போல
பக்தியானது ஒரு மனிதனை உயர்ந்த நிலைக்கு அழைத்து செல்லும்.
இறைவன் மீது செலுத்தும் அன்பாகவும் இது அமையும். அவனை தவிர தனக்கு வேறு எந்த பற்றுதலும் கிடையாது என்ற பயிற்சியின் பெயரே மகேஸ்வரதலமாகும்.
எண்ணங்களை அடக்கி தனக்குள் பயணத்தை பக்தி பூர்வமாக நடத்தி கொண்டிருக்கும் மனிதன் தனக்கு வெளியே உள்ள அல்லது வெளியில் இருந்து தன்னை தாக்கவல்ல அசுத்தம் எதுவென சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளகிறான்.
இதனால் தன்னை முழுமையாக ஈஸ்வரனுக்கு அர்ப்பணித்து கொள்வதனால் தன்னை சுற்றியுள்ள பகுதிகளை தான் அறியாமலேயே சுத்தப்படுத்தி கொள்கிறான். இந்த பயிற்சிக்கு பிரசாதித்தல் நிலை என்று பெயர்.
பக்தியில் கணிந்து கடவுளுக்கு தன்னை முழுமையான அர்பணித்து கொள்ளும் பக்தன் அடுத்து அடையும் நிலை தானும் கடவுளும் வேறல்ல இரண்டும் ஒன்றுதான் என்பதாகும். இதற்கு பிராண லிங்கத்தலம் என்று பெயர்.
இறைவனுடன் கலந்த நிலையில் ஆனந்தத்தில் முழ்கும் பயிற்சிக்கு சரண தலம் என்று பெயர்.
சிவலிங்கத்தின் பண்புகளை எல்லாம் உள்வாங்கி ஐக்கியத்தலம் என்பதை அடைகிறான்
ஐக்கியதலம் பயிற்சியால் முக்தியை நோக்கி கனியும் போது ஆறு பயிற்சி முறைகளும் நிறைவடைந்து சமரச பக்தியை சாதகன் வெல்லுகிறான் என வீரசைவம் வலியுறுத்துகிறது.
இந்த பயிற்சி முறைகளை ஊன்றி கவனிக்கும் போது வீர சைவத்தின் தனிதன்மையை நம்மால் உணராமல் இருக்க முடிவதில்லை.
பக்தி ஞானம், கிரியை ஆகிய மூன்றுக்கும் வீரசைவம் முதலிடம் கொடுக்கிறது.
இந்த மூன்றும் சமமான வேகத்தில் வளர்ந்தால் தான் இறைவனோடு இரண்டற கலக்கும் நிலை வந்தமையும் பக்தி, ஞானம், கிரியை ஆகிய மூன்றையும் பெற வீரசைவம் சொல்லும் நடைமுறைகனை பின்பற்றினாலே போதும்.
காட்டுக்கு சென்று கடுந்தவம் ஏற்று முக்திக்காக பாடுபடவேண்டியதில்லை.
சகல துறையிலும் ஒழுக்கத்தை மட்டுமே பின்பற்ற வேண்டுமென வற்புறுத்தப்படும் போது அது உண்மையாக கடைபிடிக்கப்படும் போது அங்கு இறைவனின் தனிபெரும் கருணை தானாகவே வந்தமையும்.
வீரசைவம் என்பது நமது தமிழகத்தில் கும்பகோணம், காஞ்சிபும், மதுரை, திருப்பறக்குன்றம், சேலம், திருச்சி, தஞ்சை, கோவை, சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் பல திருமடங்கள் நிறுவப்பட்டு வீரசைவ நெறி கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இருந்து பரப்பப்பட்டு வருகிறது.
புதுச்சேரியை அடுத்துள்ள பொம்மபுரம் திருமடமும்,
திருக்கோவிலுர் கீழையூரிலுள்ள ஞானியார் திருமடமும் வீரசைவ நெறியை பரப்பும் கேந்திரங்களே ஆகும்.
துறைமங்கல சிவபிரகாசர்,
சிதம்பர சுவாமிகள் குமாரதேவர்,
சாந்தலிங்க அடிகளார் ஆகிய தமிழ் பெரியார்களும்
இந்த மரபில் வந்த ஞானிகளாவார்.
வீர சைவ மரபில் ஜங்கமம் என்ற கோட்பாடு மிகவும் புகழ்வாய்ந்ததாகும். இதற்கு நேரிடையான பொருள் அசைவது என்பதாகும்.
இதனாலேயே இந்த நெறிவழியில் துறவு வாழ்வை மேற்கொள்ளவற்கு ஞானியர் ஜங்கமர் என்ற பட்ட பெயர் மரபு வாழியாக வழங்கப்படுகிறது.
மேலும் இவர்களை ஜீவன் முக்தர்கள் என்று அழைப்பது மரபு.
உலகிலுள்ள அனைத்து மதங்களிலும் ஆத்மா தெளிவு பெற்ற ஞானிகளை ஜீவன் முக்தர்கள் என அழைப்பது வழக்கம்.
ஆனால் சாதாரண வீர சைவனை கூட ஜீவன் முக்தன் என்று அழைக்கிறார்கள். இதற்கு சரியான காரணமும் இருக்கிறது.
நமது மதம் கர்மவினை என்றொரு கோட்பாடை உயிர் நாடியாக கொண்டது என நமக்கு தெரியும். கர்ம வினையின் பரிணாம வளர்ச்சி தான் மறுபிறப்பு கொள்கையாகும். ஆனால் .
இந்து மதத்தில் ஒரு பிரிவாக இருக்கும் வீரசைவம் நமது உயிர்களுக்கும் மறு பிறப்பு உண்டு என்பதை தர்க்கரீதியில் மறுக்கிறது.
கடவுளிடம் நெருங்காத மனிதனே பந்த பாச தளையில் கர்ம வளையத்திற்கு அகப்பட்டு பிறப்பு இறப்பு சக்ரத்தில் மாட்டி தவிக்கிறான்
வீர சைவனோ பிறந்த நேரம் முதல் மரண காலம் வரையிலும் முழு முதற் கடவுளின் திருமேனியான சிவலிங்கத்தை தனது உடலில் தாங்கி வாழ்கிறான்
சிவலிங்கம் எங்கு உள்ளதோ அந்த இடம் சிவாலயமாகும். அப்படியென்றால் வீரசைவனின் உடலும் சிவாலயமாகும்.
ஆலயத்தை அசுத்தமும் சித்த மலமும் அணுகவே அணுகாது.
சித்த மல மறுத்தவன் சிவனாகவே ஆகி விடுகிறான். அதாவது வீர சைவ நெறியை பின்பற்றும் ஒவ்வொருத்தனும் சிவதன்மை பெற்ற முழு மனிதனே ஆவான்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
லேபிள்கள்
வீரசைவர் வலைதளம்
லேபிள்கள்:
வீரசைவர் வலைதளம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்

கருத்துகள்
கருத்துரையிடுக